மூங்கில் கூடை தயாரிப்பு தொழில் - வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

கோவையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக மூங்கில் கூடை தயாரிப்பு தொழில் முடங்கி கிடக்கிறது. தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கோவை தடாகம் ரோடு மேதவர் காலனி, அருணாசலம் வீதி, மெக்ரிக்கர் வீதி, தாமஸ் வீதி, தேவாங்கர் காலனி, பூமார்க்கெட், சீரநாயக்கன்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மேதவர் சமூகம் என அழைக்கப்படும் மூங்கில் கூடை பின்னும் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 800 குடும்பங்களை சேர்ந்த 3,500 ஆண், பெண் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூங்கில் வரவழைத்து, பல்வேறு டிசைன்களில் மூங்கில் கூைட, முறம், ஸ்கிரீன் தட்டி, பாடை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கின்றனர். வழக்கமான நாட்களில் ஒரு பெண் தொழிலாளி 200 ரூபாய், ஆண் தொழிலாளர் 300 ரூபாய் தினக்கூலியாக பெற்று வந்தனர். ஆனால், தற்போது, கடந்த 40 நாட்களாக கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளதால் இத்தொழில் அடியோடு முடங்கி கிடக்கிறது.

தமிழக-கேரள எல்லைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு மூடப்பட்டு விட்டதால், அங்கிருந்து மூங்கில் பொருட்கள் வரவில்லை. அத்துடன், கோவையில் சிறு சிறு மூங்கில் கூடைகள் தயாரித்து இருப்பில் வைத்திருந்தாலும், அதுவும் விற்பனையாகவில்லை. கோவை மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள மூங்கில் கூடை பொருட்கள் முடங்கி கிடக்கிறது. இத்துறையில் இயந்திரம் கிடையாது. முழுக்க முழுக்க கைவண்ணத்தால் மட்டுேம மூங்கில் பொருட்களை தயாரிக்க முடியும். அன்றாடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக இங்குள்ள தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது வேலையின்றி முடங்கி கிடக்கின்றனர். இவர்களது வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மூங்கில் கூடை தயாரிப்பு தொழிலாளர் சங்க தலைவர் புலவர் பழனிசாமி கூறுகையில், ‘’ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டால் மட்டுமே இத்தொழில் இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவரை, மாவட்ட நிர்வாகம் இத்துறை தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். முழுக்க முழுக்க கைத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இத்துறை தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கைவிட்டு விடாமல் தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும்’’ என்றார்.